2 நவ., 2021

பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள் 🤲

  சப்தம் கேட்டால் நாமும் பாங்கில் உள்ள வாசகங்களை கூற வேண்டும்!

தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்!

பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்!

பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள்!

பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள்!

பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள்!

பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்!

பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.

(நூல் : முஸ்லிம் : 629)

💜 பாங்கு கூறி முடிந்த பின்பு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும்!

• ஸலவாத் சில வார்த்தைகள் மாற்றங்கள் உடன் மொத்தமாக 7 வெவ்வேறு ஸலவாத்கள் உள்ளன!

• அதில் சிலவைகள் பலகீனம் ஆகும் ஸஹீஹான 4 ஸலவாத்களை மட்டும் இங்கே குறிப்பிட்டு உள்ளோம்!

• இதில் நாம் ஏதேனும் ஒன்றை ஓதி கொண்டாலே போதுமானது!

❤️ முதல் ஸலவாத் :

‘ அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா
இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத் ’

‘ அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா
இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத் ’

பொருள் : இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்!

(நூல் : புகாரி : 3370)

❤️ இரண்டாம் ஸலவாத் :

'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூலிக்க கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம'

பொருள் : யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீது கருணை புரிந்ததைப்போன்று, உனது அடியாரும் தூதருமாகிய முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது கருணை புரிவாயாக! மேலும், இப்ராஹீமின் மீதும், இப்ராஹீமின் குடும்பத்தார் மீதும் அருள் புரிந்ததைப்போன்று, உனது அடியாரும் – தூதருமாகிய முஹம்மத் மீதும், முஹம்மதின் குடும்பத்தார் மீதும் நீ அருள்புரிவாயாக!

(நூல் : புகாரி : 4798)

❤️ மூன்றாவது ஸலவாத் :

‘ அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி, வ துர்ரியத்திஹி, கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி, கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம. இன்னக்க ஹமீதும் மஜீத் ’

பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்!

(நூல் : முஸ்லிம் : 686)

❤️ நான்காவது ஸலவாத் :

‘ அல்லாஹும்ம, ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம,வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன இன்னக்க ஹமீதும் மஜீத் ’

பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக! அகிலத்தாரில் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் அளித்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சமளிப்பாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்!

(நூல் : முஸ்லிம் : 682)

💜 ஸலவாத் கூறுவதன் சிறப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்!

(நூல் : முஸ்லிம் : 687)

💟 பாங்கு துஆ :

• ஹதீஸ்களில் இரண்டு துஆக்கள் உள்ளது நமக்கு எந்த துஆ மனனம் உள்ளதோ அந்த துஆவை ஓதி கொள்ளலாம்!

• பாங்கு கூறி முடித்த பின்பு ஸலவாத் ஓதிய பின்பு கிழே ஏதேனும் ஒரு துஆவை ஓத வேண்டும்!

اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا اَلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِيْ وَعَدْتَهُ

‘ அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு ’

பொருள் : முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

துஆவின் சிறப்பு : பாங்கோசை  கேட்ட பின்பு மேலே உள்ள துஆவை ஓதினால் அவருக்கு மறுமையில் நாளில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை அவசியம் கிடைக்கும்!

(நூல் : புஹாரி : 614)

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ  شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ  رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولاً وَبِالإِسْلاَمِ دِينًا

‘ அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் ’

பொருள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்!

துஆவின் சிறப்பு : பாங்கு கூறிய பின்பு மேலே உள்ள துஆவை ஓதினால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்!

(நூல் : முஸ்லிம் : 630)

💟 பாங்கு கூறும் பொழுது நம்முடைய சமூகம் செய்யும் சில அறியாமைகள் செயல்கள் :

❤️ ஸலவாத்துன்னாரிய்யா :

• நம்முடைய நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்க கூடிய ஒன்று தான் இந்த ஸலவாத் ஆகும்! இது இஸ்லாத்தில் கிடையாது!

• நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும்!

• நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு வெவ்வேறு ஸலவாத்கள் கற்று கொடுத்து உள்ளார்கள் ஆனால் ஒரு போதும் ஸலவாத்துன்னாரிய்யா என்ற ஸலவாத்தை சொல்லி கொடுக்க வில்லை!

• இந்த ஸலவாத்துன்னாரிய்யா பற்றி ஹதீஸ்களில் கிடையாது ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலயோ அல்லது ஸஹாபாக்கள் வாழ்ந்த காலத்திலயோ அல்லது தாபியீன்கள் - தபா தாபியீன்கள் வாழ்ந்த காலத்திலயோ இந்த ஸலவாத்துன்னாரிய்யா கிடையாது!

• மிகவும் பின்னால் வந்த சுபியாக்ள் கொள்கை கொண்ட வழிகேடு கொள்கை கொண்டவர்கள் அவர்களாக சுயமாக உருவாக்கி கொண்டு தான் இந்த ஸலவாத்துன்னாரிய்யா ஆகும்!

• இந்த ஸலவாத்துன்னாரிய்யா என்ற ஸலவாத் தெளிவான ஷிர்க் ஆகும் காரணம் அதன் பொருளை நாம் படித்தாலே நமக்கு புரியும்!

ஸலவாத்துன்னாரிய்யா பொருள் :

யா அல்லாஹ்! எவர் மூலம் சிக்கல்கள் அவிழ்ந்து விடுமோ; எவர் மூலம் கஷ்டங்கள் அகன்று விடுமோ; எவர் மூலம் தேவைகள் நிறைவு செய்யப்படுமோ; எவர் மூலம் ஆசைகள் பூர்த்தி செய்யப் படுமோ; எவருடைய திருமுகத்தின் மூலம் மேகத்திலிருந்து மழை பெறப்படுமோ அந்த எங்கள் தலைவர் மீது முழுமையாக நீ அருள் புரிவாயாக!

• அல்லாஹ்விற்கு மட்டும் உடைய தன்மைகளை நவதுபில்லாஹ் நபி (ஸல்) அவர்களை ஒப்பிட்டு கூறுகிறார்கள்!

(நபியே!) நீர் கூறும் : “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை!

(அல்குர்ஆன் : 10 : 49)

• நபி (ஸல்) அவர்களுக்கு பல சிறப்புகள் இருந்தாலும் அவர்கள் மனிதரே அல்லாஹ்வின் உதவி இன்றி எதுவும் அவர்களால் செய்ய முடியாது!

• இந்த ஸலவாத்துன்னாரிய்யாவை மக்கள் அதிகம் ஓத வேண்டும் என்று இதற்கு நிறைய சிறப்புகள் கூறுவார்கள் இந்த ஸலவாத்தை 4444 முறை ஓதினால் கஷ்டம் நோய் பிரச்சனை அனைத்துமே தீர்ந்து விடும் என்று ஆனால் இந்த ஸலவாத்தை ஓதுவதே முதலில் நம்மை பெரும் பாவத்தில் சேர்த்து விடும்!

❤️ ரூஹ்ஹானி வருவார்கள்?

• மக்கள் மத்தியில் உள்ள மற்றொரு பிரபலமான அறியாமை மஹ்ரிப் நேரத்தில் ரூஹ்ஹானி (இறந்தவர்களின் ரூஹ் (உயிர்)) வரும் என்று!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால்' அல்லது 'அந்திப் பொழுதாம்விட்டால்' உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன!

(நூல் : புகாரி : 5623)

• ஷைத்தான்கள் மற்றும் கெட்ட ஜின்கள் சூரியன் மறையும் நேரத்தில் தான் வெளியே வரும் இதை தான் நம்முடைய சமூகத்தினர் ரூஹ்ஹானி வரும் என்று கூறுவார்கள்!

• ஆனால் இறந்தவர்களால் ஒரு போதும் மீண்டும் வர முடியாது!

❤️ தலையை கட்டாயம் மறைக்க வேண்டுமா?

• பாங்கு கூறினால் நம்முடைய சமூகத்தில் உள்ள மற்றொரு அறியாமை பாங்கு கூறினால் பெண்கள் கட்டாயம் தலையை மறைக்க வேண்டும் என்று!

• ஆனால் இவ்வாறு செய்வதற்கு அல் குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ எந்த ஆதாரமும் கிடையாது! இது அறியாமை செயல் ஆகும்!

❤️ வேலைகள் எதுவும் செய்ய கூடாதா?

• பாங்கு கூறும் பொழுது எந்த வேலையும் செய்ய கூடாது! ஒரே இடத்தில் நிற்க வேண்டும் என்று நம்முடைய சமூகத்தில் ஒரு அறியாமை நிலவுகிறது ஆனால் இதற்கு ஸஹீஹான எந்த ஆதாரமும் கிடையாது! இவை எல்லாமே மூடநம்பிக்கையே!

• பாங்கு கூறினால் அதற்கு பதில் நாம் வேலை செய்து கொண்டே கூட கூறலாம்!

• அல்லாஹ் பாதுகாக்கணும் இன்றும் சில ஊர்களில் பாங்கு கூறினால் தலை வார கூடாது உண்ண கூடாது வீட்டு கதவு மூடி இருக்க கூடாது கழிவறை செல்ல கூடாது என்று எல்லாம் நிறைய கட்டுக்கதைகள் கூறுவார்கள் ஆனால் இதற்கு எல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது! இவை எல்லாமே மக்கள் அறியாமை ஆகும்!

@அல்லாஹ் போதுமானவன் 💞