12 டிச., 2012

நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் உறுதி !!!!

என் கொள்கை சகோதர !! சகோதரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு .

இன்ஷா அல்லாஹ், வாழ்வோம் சத்திய கொள்கையில்,
மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே!!

இப்ராஹிம் (அலை) அவர்கள் சந்தித்த சிரமங்களையும் அதை அவர்கள் துணிவுடன் எதிர்கொண்ட விதத்தையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவாக எடுத்துரைக்கிறான். இவர்களின் வீர வரலாற்றை மனதில் நிலைநிறுத்தினால் தீமைகளை ஒடுக்குவதிலும் சோதனைகளை தாங்குவதிலும் அவர்களைப் போன்று துணிவுள்ளவர்களாக நாம் திகழ்வோம்.

இப்ராஹிம் (அலை) அவர்கள் ஒரு சமுதாயமாகத் திகழ்ந்தார்கள் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.
அல்குர்ஆன் (16 : 120)

பல்லாயிரக்கணக்கான மக்கள் செய்ய வேண்டிய பணியை தன்னந்தனியாக செய்து முடித்தார். பல்லாயிரக்கணக்கான மக்களிடத்தில் இருக்கின்ற உறுதியை இப்ராஹிம் (அலை) ஒருவர் பெற்றிருந்தார் என்பது இந்த வசனத்தின் பொருளாகும். அவர்களின் மனு உறுதியை பின்வரும் சம்பவங்கள் எடுத்துரைக்கிறது.
இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர் வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.

''நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?'' என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, ''எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்'' என்று அவர்கள் கூறினர்.

''நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழி கேட்டிலேயே இருக்கிறீர்கள்'' என்று அவர் கூறினார்.

''நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?'' என்று அவர்கள் கேட்டனர்.

''அவ்வாறில்லை வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்கு சாட்சி கூறுபவன்'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் (21 : 51 to 56)

முன்னோர்கள் மீது வைத்திருந்த குருட்டு நம்பிக்கையால் இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை இணைவைத்தார். தன் தந்தையின் கொள்கை வழிகேடு என்பதை மட்டும் கூறாமல் தந்தை மதிக்கின்ற முன்னோர்களும் வழிகெட்ட கொள்கையைத் தான் கடைபிடித்துள்ளார்கள் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் உரக்கச் சொல்கிறார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களைத் தவிர்த்து அனைவரும் இணைவைப்புக் கொள்கையில் ஊரியவர்கள். ஊரில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு பக்கபலமாக யாரும் இல்லை.

இந்த நிலையில் இணைவைப்பை வழிகேடு என்று பகிரங்கமாக எடுத்துரைத்தார்கள் என்றால் அவர்களிடத்தில் இருந்த மன உறுதி எத்தகையது என்பதை கொஞ்சம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தீமைகளை ஒடுக்குவதற்கு மனவ­மை வேண்டும்
ஏகத்துவம் எழுச்சி பெற்று பெரும் சமுதாயம் தவஹீத் கொள்கைய தழுவி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் வழிகெட்ட தன் தந்தையைப் பார்த்து தந்தையின் கொள்கை வழிகேடு என்று தந்தையிடம் நேரடியாக ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்க எத்தனை மகன்களுக்கு மனஉறுதி உள்ளது?

இவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்து மனஉறுதியை வரவழைத்துக்கொள்ள வேண்டும். இப்ராஹீம் (அலை) அவர்களின் மன உறுதியை எடுத்துக்காட்டும் அடுத்த நிகழ்வை இனி காண்போம்.
''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்'' (என்றும் கூறினார்)
அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.
''நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்'' என்று அவர்கள் கூறினர்.

''ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்'' எனக் கூறினர்.
''அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்'' என்றனர்.

''இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?'' என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவர், ''இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று அவர் கூறினார்.
உடனே விழிப்படைந்து ''நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.
பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, ''இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!'' என்றனர்.

''அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா?'' என்று கேட்டார்.
''அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?'' (என்றும் கேட்டார்.)
அல்குர்ஆன் (27 : 57 லி 67)

சிலைகளை பெரிய சிலை தான் உடைத்தது என்று மக்களின் மீதுள்ள பயத்தால் இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய் கூறவில்லை. நீங்கள் வணங்கும் சிலைகளை நான் உடைப்பேன் என்று முன்கூட்டியே இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறிவிட்டார்கள்.

மக்கள் தன்னிடம் வர வேண்டும் என்பதற்காக இப்ராஹீம் (அலை) அவர்கள் இவ்வாறு முன்கூட்டியே கூறிவிட்டார்கள். இந்த சிலைகளால் பேச முடியாது எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பததை மக்களுக்கு உணர்த்துவதற்காக பெரிய சிலை உடைத்தது என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.

இந்த வரலாற்றை படிக்கும் போது இவர்களைப் போன்று நாமும் திகழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் எண்பதால் இறைவேதத்தை படிக்குமாறு இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

நெருப்பிற்கு அஞ்சாதவர் !!!!!!

''நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!'' என்றனர்.
''நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு'' என்று கூறினோம்.

அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.
அல்குர்ஆன் (27 : 68 லி 70)

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது ''அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்'' என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள், ''நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்'' என மக்கள் (சிலர்) கூறியபோது சொன்னார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிக மாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­லி)
நூல் : புகாரி (4563)

இப்ராஹீம் (அலை) அவர்களின் அறிவுப்பூர்வமான கேள்விக்கு பதில் கூற முடியாமல் வாயடைத்துப் போன மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்பில் தள்ளினார்கள். நெருப்பைக் கண்டு அஞ்சாமல் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து பின்வருபவர்களுக்கு அழகிய முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டியுள்ளார்கள்.


இறைக்கட்டளைக்கு கட்டுப்பட மனஉறுதி வேண்டும்!!!

உலகத்தின் மீதுள்ள மோகத்தால் அதிகமானவர்கள் இறைக்கட்டளையை மீறுகிறார்கள். அற்ப சுகங்களுக்கு அடிபணிந்து விடுகிறார்கள். தீமைகளை விட்டு விலகுவதற்கு மன உறுதி அவசியம் தேவைப்படுவது போல் இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கும் மன உறுதி தேவைப்படுகிறது.

மன உறுதி உள்ளவர்கள் இறைவனுக்கு கட்டுப்படுவதற்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்யத்துணிந்துவிடுவார்கள். இதற்கு அழகிய முன்மாதிரியாக இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்கையை எடுத்துக்கொள்ளலாம்.

இறைவன் கட்டளையிட்ட ஒரே காரணத்திற்காக தன் மனைவி ஹாஜர் (அலை) அவர்களையும் சிறு குழந்தையாக இருந்த இஸ்மாயீல் (அலை) அவர்களையும் மனிதர்கள் யாரும் வசிக்காத பாலைவனமாக இருந்த மக்காவில் இப்ராஹீம் (அலை) விட்டுவிட்டு வந்தார்கள்.

மனைவியின் மீதுள்ள அன்போ குழந்தையின் மீதுள்ள பாசமோ இறைவனுக்கு கட்டுப்படாமல் அவர்களைத் தடுக்கவில்லை. தன் குடும்பத்தாரின் நிலை என்ன ஆகுமோ என்று அவர்கள் அஞ்சவுமில்லை.
மாறாக இவர்களை பாதுகாக்கின்ற பொறுப்பை வல்ல இறைவனிடம் ஒப்படைத்தார்கள். இத்தகைய ஈமானிய உறுதி நமக்கும் ஏற்பட இப்ராஹீம் (அலை) அவர்களிடமிருந்து படிப்பினையை நாம் பெற வேண்டும்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!
அல்குர்ஆன் (14 : 37)

இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்து விட்டார்கள். அந்த நாள் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூடக் கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின் தொடர்ந்து வந்து, ''இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள், ''அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?'' என்று கேட்க, அவர்கள், 'ஆம்' என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், ''அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக் குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்: ''எங்கள் இறைவா! (உன் ஆணைப் படி) நான் என் சந்ததிகளை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்.) எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்கள் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள்'' என்று இறைஞ்சினார்கள். (அல் குர்ஆன் 14:37)

இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்குப் பாலூட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர்ப் பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்ட போது அவரும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை.... அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை.... அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்ட படி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தன் மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச் சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறைகள் செய்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ''இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற 'சயி' (தொங்கோட்டம்) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்ட போது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, ''சும்மாயிரு'' என்று தமக்கே கூறிக் கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள்.

அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, ''(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)'' என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். ...அல்லது ''தமது இறக்கையினால் தோண்டினார்கள்'' என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்... அதன் விளைவாகத் தண்ணீர் வெட்டப்பட்டது. உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம் போல் (கையில்) அமைக்கலானார்கள்; அதைத் தம் கையால் இப்படி (''ஓடிவிடாதே! நில்'' என்று சைகைசெய்து) சொன்னார்கள். அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளத் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது.

''நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்குக் கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால்... அல்லது அந்தத் தண்ணீரிருந்து அள்ளியிருக்காவிட்டால்.... ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் ஓர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும்' என்று சொன்னார்கள்
பிறகு, அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், ''நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்து போய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிடமாட்டான்'' என்று சொன்னார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (3364)

மேலுள்ள சம்பவத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் இறைவனின் கட்டளையை செயல்படுத்துவதற்காக மன உறுதியுடன் செயல்பட்டிருப்பதை காணமுடிகிறது. துன்பங்களை தாங்கி பொறுமை காக்கும் போது அல்லாஹ்வின் உதவியை கண்கூடாக அவர்கள் காண்கிறார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் இன்னொரு மிகப்பெரிய சோதனையை கொடுத்தான். இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தைக் கொடுக்காமல் இறைவன் நீண்ட காலம் சோதித்தான். பிறகு இஸ்மாயீல் (அலை) அவர்களை வழங்கினான். இஸ்மாயீல் (அலை) பருவ வயதை அடைந்த உடன் அவர்களை தனக்கு அறுத்துப்ப­லியிடுமாறு இறைவன் உத்தரவிட்டான். '


இறைவன் உத்தரவிட்டுவிட்டதால் இதையும் செய்யத் தயாரானார்கள். பிள்ளைப் பாசம் அவர்களின் மன உறுதியை அசைக்கவில்லை. இப்ராஹீம் (அலை) இவ்வளவு பெரிய தியாகம் புரிந்ததற்கு அவர்களிடத்தில் இருந்த மன உறுதி தான் காரணம்.
அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது ''என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார். ''என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, ''இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்திவிட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூ­லிவழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.
இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம் பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.
அல்குர்ஆன் (37 : 102 லி 108)