22 செப்., 2017

15 செப்., 2017

பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியுமா? - அல்குர்ஆன்



அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன'' என்றும் நாம் கூறினோம். (திருக்குர்ஆன் 2:36)


பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்! (திருக்குர்ஆன் 7:10)


  "(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன'' என்று (இறைவன்) கூறினான். (திருக்குர்ஆன் 7:24)


  "அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும் கூறினான். (திருக்குர்ஆன் 7:25)


  அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலைபெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 30:25)


  வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனுக்கே உரியவர்கள். அனைத்தும் அவனுக்கே கட்டுப்படுபவை. (திருக்குர்ஆன் 30:26)

  மனிதர்கள் பூமியில் தான் வாழ முடியும் 

இவ்வசனங்களில் (2:36, 7:10, 7:24, 7:25, 30:25, 30:26) "இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும்'' என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. 

பூமிக்கு மிக அருகில் அதன் துணைக்கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும், பூமியின் துணைக்கோளான சந்திரனிலும் மனிதன் வாழமுடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5,80,00,000 (ஐந்து கோடியே எண்பது லட்சம்) கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது. 

முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து, இக்கோளின் அதிகபட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும், குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்கள் தாங்கிக் கொள்ளத் தக்க 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம். 

மேலும் பூமியின் ஈர்ப்பு விசையில் மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது. 

வீனஸ் எனப்படும் வெள்ளிக்கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10,08,00,000 (பத்து கோடியே எட்டு லட்சம்) கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகபட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10 மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது. 

மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலைவிலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகித அளவுக்குத்தான் ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும், குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது. 

ஜூபிடர் எனும் வியாழன் கோள், சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இக்கோளில் இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது. 

சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே உள்ளது.

யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும், நெப்டியூன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும், புளூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில் கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது. 

பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர், காற்று எதுவும் இங்கு இல்லை. இங்கு பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும், இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். 

சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும். 

சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்று கூறப்பட்டாலும் அது நிரூபிக்கப்படவில்லை. 

மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள். 

மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது. 

சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும். 
சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். 

உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில் தங்குவதை 'வாழ்வது' என்று கூறக் கூடாது. 

மேலும் பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. 
இப்படிச் சாய்வாகச் சுழல்வதால்தான் கோடை, குளிர், வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன. 

வருடம் முழுவதும் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது. 

எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு "இதில் தான் வாழ்வீர்கள்'' என்று எவ்வாறு அடித்துக் கூற இயலும்? 

எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். 
எனவே இதுவும் திருக்குர்ஆன், இறைவேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது. 

  வேறு கோள்களில் உயிரினங்கள்

பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன் வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது விளக்கப்பட்டுள்ளது. 

ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதனல்லாத உயிரினங்கள் இருக்க முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இது முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும் சில கோள்களில் தண்ணீர் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதால் இவ்வாறு ஊகம் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் இந்தச் சாத்தியத்தை மறுக்கவில்லை. மாறாக வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்க முடியும் என்று தெரிவிக்கிறது. 

 30:26. வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனுக்கே உரியவர்கள். அனைத்தும் அவனுக்கே கட்டுப்படுபவை.


42:29. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும்போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்.

இவ்வசனம் வானத்திலும், பூமியிலும் உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதாகக் கூறுகிறது. 

பூமியைத் தவிர மற்ற கோள்களில் அல்லது துணைக் கோள்களில் உயிரினம் இருக்கின்றன என்று நிரூபிக்கப்படாவிட்டாலும் உயிரினமான வானவர்கள் வானுலகில் இருப்பதால் அதைக் குறிப்பதாக இவ்வசனத்தை எடுத்துக் கொள்ளலாம். 

மற்ற கோள்களில் உயிரினம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால் இவ்வசனம் அதையும் உள்ளடக்கிப் பேசியுள்ளது என்று எடுத்துக் கொள்ள முடியும்.

தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் - அல்குர்ஆன்



பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (திருக்குர்ஆன் 31:14)
  தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 46:15)

  பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:233)
  பால்குடிப் பருவம் எது வரை?
2:233, 31:14 ஆகிய வசனங்களில் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆனால், 46:15 வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும்போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
அதில், பாலூட்டும் காலங்கள் என்று இறைவன் கூறிய இரண்டு வருடங்களை (24 மாதங்களை) கழித்தால் கர்ப்பகாலம் ஆறுமாதம் என்று ஆகிறது. ஒரு குழந்தையின் கர்ப்பகாலம் ஆறு மாதம் என்று எந்தக் காலத்திலும் எவரும் கூறியதில்லை. ஏறத்தாழ பத்து மாதங்கள் என்று இன்றைய சமுதாயம் விளங்கி வைத்துள்ளது போலவே திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்து மக்களும் விளங்கி வைத்திருந்தனர்.
கர்ப்ப காலம் பத்து மாதங்கள் என்று அனைத்து மனிதர்களும் விளங்கி வைத்திருக்கும்போது, "கர்ப்ப காலம் ஆறு மாதம்'' என்று குர்ஆன் வேண்டுமென்றே தான் கூறுகிறது. இந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தான் பொருத்தமானதாகும்.
அனைவரும் தெரிந்து வைத்துள்ளதற்கு எதிராக இறைவன் வேண்டுமென்றே கூறுகிறான் என்றால் இதற்கு ஆழமான பொருள் இருக்கும் என்று சிந்தித்து, கரு வளர்ச்சியை ஆராயும்போது இவ்வசனம் இறைவார்த்தை என்பதை தனக்குத் தானே நிரூபிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம்.
மனிதனுக்கு என்று தனியான வித்தியாசமான வடிவம் உள்ளது. மற்ற விலங்கினங்களுக்கு என்று தனியான வடிவம் இருக்கிறது. மனிதன் கருவில் விந்துத் துளியாகச் செலுத்தப்படுகிறான். பின்னர் கருவறையின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு வளர்கிறான். அதன் பின்னர் சதைக் கட்டியாக ஆகின்றான். இந்தக் காலக்கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய வடிவத்தை எடுப்பதில்லை. தாயின் கருவறையில் இருக்கும் ஆடு எவ்வாறு ஒரு இறைச்சித் துண்டு போல் கிடக்குமோ அது போலவே மனிதனும் இருக்கிறான். கைகளோ, கால்களோ எதுவுமே தோன்றியிருக்காது.
கருவறையில் இந்த நிலையை அடைந்த இறைச்சித் துண்டைப் பார்த்து இது மனிதனுக்குரியது. இது இன்ன பிராணிக்குரியது என்று கூற முடியாது.
இந்த நிலையைக் கடந்தபின் தான் மனிதக்கருவில் இருந்த செல்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றன. அதன் பின்னர் தான் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய தன்மைகளுடனும், உறுப்புகளுடனும் அந்தக் கரு வளரத் துவங்குகிறது.
மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும், மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள் மொத்தம் ஆறு தான். அதற்கு முந்திய காலகட்டத்தில் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத் தன்மையும் அடையாளமும் இல்லாத இறைச்சித் துண்டுதான் கருவில் இருந்தது.
பின்வரும் வசனத்திலும் வேறு வார்த்தையில் இந்தக் கருத்து கூறப்படுகிறது.
பின்னர் விந்துத்துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத்துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். (திருக்குர்ஆன் 23:14)
பின்னர் மற்றொரு படைப்பாக அதை நாம் ஆக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இந்த நிலையை அடையும் வரை கருவில் எல்லாப் படைப்பும் ஒன்றுதான். அதன் பின்னர் ஆடு ஆடாகவும், மாடு மாடாகவும், மனிதன் மனிதனாகவும் வேறுபடும் நிலை உருவாகிறது. எனவே அதை மற்றொரு படைப்பு என்று இறைவன் கூறுகிறான்.
இவ்வசனத்தில் குழந்தையைச் சுமந்தாள் என்று கூறாமல் மனிதனைச் சுமந்தாள் என்று இறைவன் கூறுவதையும் கவனிக்க வேண்டும்.
  தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயக் கடமை
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும், தாய்க்கும் ஏராளமான நன்மைகளைத் தருவதால் குழந்தைக்கு இரு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
இதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இது குறித்து ஆய்வு செய்து, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றும், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் கூறியுள்ளார்.
தங்களது குழந்தைகளுக்குப் பெண்கள் பாலூட்ட வேண்டும் என்பது மதக் கட்டளையாக இஸ்லாத்தில் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது. வேறு எந்த மதத்திலும் இது குறித்து கட்டளை எதுவும் போடப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் நவீன காலத்தில் புட்டிப்பால் குடித்தே குழந்தைகள் வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். தாய்மார்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற உண்மையும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களைப் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது.
  இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது என்று எந்த நிபந்தனையும் இல்லை. பிறந்த குழந்தைக்கு நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று கொடுத்துள்ளார்கள்.
நான் (எனது மகன்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை (மக்காவில்) கருவுற்றிருந்தேன். கர்ப்பக் காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டு மதீனா வந்தேன். (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களுடைய மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம்பழம் ஒன்றைக் கொண்டு வரும் படிக் கூறி,அதை மென்று அவனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீர் தான் அவனது வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனது வாயினுள் வைத்துத் தேய்த்து விட்டார்கள். பிறகு அவனுக்காக துஆச் செய்து, இறைவனிடம் அருள் வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன் தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான்.
அறிவிப்பவர்: அஸ்மா (ரலி),
நூல்: புகாரி 3909
போதிய அளவு தாய்ப்பால் சுரக்காத பெண்களும் உண்டு. இவர்கள் வேறு உணவுகளை வழங்குவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாலூட்டுவது ஹராம் என்று கூற முடியாவிட்டாலும் பாலூட்டும் பருவம் இரண்டு ஆண்டுகள் என்று திருக்குர்ஆன் கூறுவதால் அத்துடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுவது தான் சிறந்தது.