31 மே, 2012

பாவங்களின் பரிகாரங்கள்!


நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தோ தெரியாமலோ நிறைய பாவங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்து கொண்டிருக்கும் பாவங்கள் மன்னிக்கப்படுதற்கான வழிமுறைகள், ஹதீஸ்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிறர் குறைகளை மறைத்தல்!
யார் இவ்வுலகில் பிறருடைய குற்றங்குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். (முஸ்லிம்)

சபையினில் ஏற்பட்ட தவறுகளுக்கு பரிகாரமாக!
ஒரு சபையினில் பங்கெடுத்துவிட்டுக் கலையும் போது,

‘ஸூப்ஹானகல்லாஹூம்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’

பொருள் : அல்லாஹ்வே உன்னைப்புகழ்வதுடன் உனது தூய்மையை நான் துதிக்கின்றேன். உன்னைத்தவிர உண்மையில் வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நான் சாட்சி கூறுகின்றேன். உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். உன் பக்கமே மீளுகின்றேன்’

என்று ஓதினால் அக்கூட்டத்தில் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (இறைவனால்) மன்னிக்கப்பட்டுவிடும். (திர்மிதீ)

உளு வை முறையாகச் செய்வது!
யார் உழுவை முறையாகச் செய்கின்றாரோ அவருடைய நகக்கண்கள் உட்பட அவரது உடம்பு முழுவதிலிருந்து பாவங்கள் வெளியேறி விடுகின்றன. (முஸ்லிம்)

சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கபட கடமையான தொழுகை
கடமையான தொழுகைக்கான நேரம் வந்ததும் யார் முறையாக உழு செய்து உள்ளச்சத்துடன் ஒழுங்காகத் தொழுகின்றாரோ அவருடைய அத்தொழுகை – அவர் பெரும்பாவங்கள் செய்யாதவரை – அவருடைய சிறிய பாவங்கள் அனைத்திற்கும் பரிகாரமாகிவிடும். அந்நிலை அவருடைய ஆயுள் முழுவதும் உண்டு. (முஸ்லிம்)

பாவம் போக்கும் ஐவேளைத் தொழுகை
“உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)

10 நாட்கள் செய்த பாவங்களைப் போக்கும் ஜூம்ஆத் தொழுகை!
யார் முறையாக உழு செய்து ஜூம்ஆவுக்(காக பள்ளிக்)கு வந்து மௌனமாக இருந்து குத்பா – உரையைக் கேட்கின்றாரோ அவருடைய ஒரு ஜூம்ஆவுக்கும் மறு ஜூம்ஆவுக்கும் இடையேயான பாவங்களும் மேலும் அதிகப்படியான மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் (முஸ்லிம்)

ஒரு வருட பாவங்களை போக்க ஆஷூரா நோன்பு!
ஆஷூரா (முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11 ஆகிய) தினங்களில் நோன்பு நோற்பதன் மூலம் கடந்த ஒரு வருட (சிறிய) பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகிறேன். (முஸ்லிம்)

இரண்டு வருடங்கள் செய்த சிறிய பாவங்களைப் போக்கும் அரஃபா நோன்பு!
அரஃபா (துல்ஹஜ் பிறை 9 ஆம்) தினத்தில் நோன்பு நோற்பது கடந்த ஒரு வருடம் மற்றும் அடுத்த ஒரு வருட (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (முஸ்லிம்)

பாவம் போக்கும் ஃநபில் தொழுகை!
ஒரு முஸ்லிம் பாவம் செய்துவிட்டால் (அதை உணர்ந்து) உழுசெய்து சுத்தமாகி இரு ரக்அத்துகள் தொழுது மன்னிப்புக் கோரினால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான் (அபூதாவுத்)

சிறிய முன்பாவங்கள் மன்னிக்கப்பட!
உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு ‘நான் உளூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று கூறினார்கள் என்றார்கள்” என ஹும்ரான் அறிவித்தார். (புகாரி)

முன்பாவங்களைப் போக்கும் ரமலான்!
ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி)

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி)

லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. (புகாரி)

நடைபாதையில் உள்ள தடைகளை அகற்றினால்?
ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான். (புகாரி)

பிந்திய இரவில் பாவமன்னிப்பு வழங்கப்படும்!
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான். (புகாரி)

அன்று பிறந்த பாலகனைப்போல் பாவமற்றவராக ஆக!
மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார். (புகாரி)

கடன்பட்டோருக்காக உதவுவதல்!
யார் ஏழையின் (கடன்போன்ற) சிரமங்களை எளிதாக்கி உதவுகின்றாரோ அவருடைய இம்மை- மறுமை சிரமங்களை அல்லாஹ் எளிதாக்கிவிடுகின்றான். (முஸ்லிம்)

பொறுமையுடன் இருந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்!
ஒரு முஸ்லிமுக்கு நோய், வேதனை, துக்கம், கவலை, தொல்லை, துயரம் முதலான முள் குத்துவது உட்பட ஏதேனும் சோதனை நிகழ்ச்தால் அ(தனைப் பொறுத்துக் கொள்வ)தற்காக அவனுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (புகாரி)

அல்லாஹ்விற்காக நோன்பு நோற்பது!
யார் அல்லாஹ்வின் வழியில் ஒரு நாள் நோன்பிருக்கிறாரோ அந்த ஒருநாள் நோன்பிற்காக அல்லாஹ் அவருடைய முகத்தை எழுபது ஆண்டுகள் நரகத்திலிருந்து தூரமாக்கி விடுகிறான். (புகாரி)

பாவங்களை அழிக்கும் தர்மம்!
தர்மம் பாவங்களை அழித்துவிடும். நீர் நெருப்பை அணைப்பதைப் போல. (திரிமிதீ)

ஹஜ் மற்றும் உம்ரா – பாவங்களுக்கான சிறந்த பரிகாரங்கள்!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)

கடல் நுரை போல உள்ள அதிகமான பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமானால்!
‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! (புகாரி).

27 மே, 2012

பயனுள்ள 100 மருத்துவக் குறிப்புகள்

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.


பெண்களுக்காக…

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.


கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்… டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


கிட்னியைக் கவனியுங்கள்.

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.


ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.


நில்… கவனி… செல்!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.


எச்சரிக்கை!

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

நன்றி : விகடன்

26 மே, 2012

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!


நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!
புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.

உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?

அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?
இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.

இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!
முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.
பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.


அது மட்டுமா?
பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.

நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.

ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,

மாயமந்திரங்கள்
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.
இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!

போலிகளிடம் ஏமாறாதீர்!
இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?

இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்  இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.

அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?

முகவரியில்லா மகான்கள்அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.

பாட்டுக்கச்சேரியும் நடனமும்
கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!

பக்கவாத்தியங்கள்
இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.

பிறந்த நாள் விழாக்கள்
இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.
இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.

ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்
நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?

விஞ்ஞானயுகத்தில் கற்காலம்
விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?
இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!


இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ?  முஸ்லிம்களா ?

1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.

இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !
இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?

முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?
இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’
‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ 
(அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,

‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!
இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!


வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,
சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!
இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.
என இன்று வீரசபதம் ஏற்போமாக!

‘இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்’
இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)
 رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار
‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!



சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ,அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோஇயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 'இயற்றியவர் யார்?'என்று திட்டவட்டமாக தெரியவில்லை.
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?
இந்த மவ்லித் "ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. 
(ஆதாரம் :சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம்:5)

'மவ்லித்' என்பதின் பொருள்
'மவ்லிது' எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் 'பிறந்த நேரம்' அல்லது 'பிறந்தஇடம்' என்பதாகும்.
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் :13)

மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?
மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான 'அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன்அலிய்யிப்னு புக்தகீன்' என்பவர் ஆவார்.
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

ஆஹா மெகா ஆஃபர்
உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மவ்லிது ஓதுவதுஅந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாகஅறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி
மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.

"திருநபி (ஸல்)அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து,அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்."
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால்அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் : நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர,தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள்பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள்பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்
.(அல்குர்ஆன் 23 : 1-11)

செலவு செய்யும் முறை
நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : "உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்யவிரும்புவேன்" என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
ஆனால், திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள்...

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும்,அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும்,நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்" எனக்கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?

"மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்"
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

அமுத சுரபி மவ்லித்
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.

"நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் 'பரக்கத்' ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம்வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது".
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி
எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.

"எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார்.
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

"நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் 'நயீம்' எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்" என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
 
படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்றநபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
(அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை

"எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்" 
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் :
அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒருகூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும்மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மாநபி (ஸல்)மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.' அவ்விருந்தில்சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒருஇசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல்   கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.

ஆண்டு தோறும்மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார்.
 (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

17 மே, 2012

அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா


            பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.
          சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம்.
சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும்,
        சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.
          இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.
பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.
           இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.
இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.
தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.

இருளும் ஒளியும்

இங்கு எனக்கு முன்பு பேசிய தோழர்கள் எல்லோரும், நல்ல முறையிலே, இஸ்லாமிய கோட்பாடுகளையும், நபிகள் நாயகத்தின் மாண்புகளையும் எடுத்துரைத்தார்கள். இங்கு பேசியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவும், இந்த இளைஞர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களாகவும், இருந்தார்கள் என்பதையறிந்து நான் மூன்று காரணங்களால் மகிழ்ச்சியடைகிறேன்.
இஸ்லாமிய இளைஞர்கள் நல்ல முறையிலே பேசிப் பழகவேண்டும் என்பது என் ஆசை; அதன்படி, பேசிய இளைஞர் அனைவருமே நன்றாகப் பேசினார்கள்.
இரண்டாவதாக, இஸ்லாமியருக்கும்-தி.மு.கழகத்தித் தொடர்பு அதிகம் இருப்பதால் சில முஸ்லிம் பெரியவர்கள் பயப்படுகிறார்கள். “அது தவறு” என்பதை எடுத்துரைத்தார்கள்.
மூன்றாவதாக, இஸ்லாமிய இளைஞர்கள் முகம்மது நபியின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவன் நான். இங்கு பேசியவர்கள் முகம்மது நபியைப் பற்றி நல்ல முறையிலே, எல்லோருக்கும் புரியும் வகையிலே, நல்ல தமிழிலே எடுத்துரைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பேசிய நண்பர்கள் கூறினார்கள்- இந்த விழாவில் அண்ணா கலந்து கொள்ளலாமா என்று யாரோ சிலர் கேட்டதாக நினைத்துக் கொண்டு, அதற்கு பதிலளிக்கும் வகையிலே பேசினார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி கேட்பதில்லை. அதற்கு பதிலாக, “இவ்வாண்டு அண்ணாதுரை ஏன் கலந்து கொள்ளவில்லை?” என்று தான் கேட்கிறார்கள். ஒரு 20, 25ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்கள் – முகம்மது நபி விழாவிலே அண்ணாதுரை கலந்து கொள்ளலாமா? என்று! ஆனால் இப்பொழுது கேட்பதில்லை.
எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு இன்று நேற்றல்ல – 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது. நண்பர் ஒருவர் இங்கு பேசுகையில் நான் வெளியூரில் ஒரு விழாவிலே கலந்து கொண்டபோது யாரோ என்னை ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு நான் இன்ன விதத்தில் பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார். அதை உங்களிடத்திலே விளக்கமாகச் சொல்லுவதும் நல்லது என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டவருடைய பெயர் கூட எனக்கு நினைவிருக்கிறது.
“நீங்கள் இவ்வளவு நன்றாக முகம்மது நபியையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் இஸ்லாமியத்திலே சேர்ந்து விடக்கூடாது?” என்று அவர்கள் கேட்டார்கள்.
அவர்களுக்கு அளித்த பதில் இதுதான்: “இஸ்லாத்தில் மார்க்கக் கட்டளை என்றும், திட்டங்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு ‘ஜமாஅத்’ என்று பெயர். இஸ்லாமிய கோட்பாடுகளை மார்க்கத் துறையை ஏற்று, அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கையுடையவர்களாக இருக்க வேண்டும். ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து, அதற்குப் பூசை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையிலே பார்த்தால் நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய ‘ஜமாஅத்’திலே நான் இல்லை”.
நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை. என்வீடு மிக நல்ல வீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படிச் சரியில்லையோ, அதைப் போலத்தான் அது அமையும். என் வீட்டைப் பற்றி நான் பெருமைப் படுவதிலே ஆச்சரியமில்லை, ‘ஜமாஅத்’திலே சேராமலே இஸ்லாத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதில் தான் பெருமை.
எனக்கு முன் பேசியவர்கள் எச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியவர்கள் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளதை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பெரியவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களானதால் அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது. எனவே, ஆயிரத்தோடு ஆயிரத்தொன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதிலே பெருமையில்லை.
யார் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த இனத்தில்-குலத்தில் பிறந்தவரானாலும் நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினால். இஸ்லாமிய சமூகத்தினர் வரவேற்கின்றனர்.
இந்நாட்டிலேயுள்ள இஸ்லாமியர்கள் சிறுபான்மையான மைனாரிட்டி சமூகமாக உள்ளவர்கள்; மற்றவர்கள் பெருவாரியான எண்ணிக்கையுள்ளவர்கள். இந்த இரு மார்க்கத்தாரிடையேயும் ஒற்றுமை நிலவ – அவர்களிடையே நல்ல தொடர்பும், சகோதரபாவமும் ஏற்பட இப்படிப்பட்ட திரு நாட்களை, பலரையும் அழைத்து நடத்துவது நல்லதாக அமையும்.
தென்னாட்டை பொறுத்த வரையில் இந்த ஒரு சமூகத்தாரிடையிலே என்றும் பகை ஏற்பட்டதில்லை. இரு சாராரிடையேயும் நல்ல தொடர்பு தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பார்த்தால் அங்குள்ள முஸ்லிம்களும் மற்ற சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பி என்று முறை வைத்துப் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம்.
வடநாட்டிலே இந்து – முஸ்லிம் கலகம் கொலை வெறியாட்டம் நடந்த போது கூடத் தென்னாட்டில் நல்ல தோழமை நிலவியது. அப்படிப்பட்ட தோழமை உணர்ச்சியும் ஒற்றுமைப் பண்பாடும் வளரச் செய்வது தி.மு.கழகப்பணிகளில் ஒன்றாகும்.
நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அவர் பிறந்த நாடு, அவர் காலத்திலிருந்த சூழ்நிலை, மத நம்பிக்கைகள், பிற்போக்கான சீர்கேடான நிலை, மூடநம்பிக்கைகள், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றிய துணுக்குகளை, நண்பர்கள் இங்கு உங்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார். மிகுந்த நெருக்கடியான – ஆபத்தான காலத்திலேயே வெற்றிகரமாக தமது இலட்சியங்களை நிறைவேற்றிக் காட்டினார்.
அதே போல் தி.மு.கழகமும் மூன்று துறைகளில் பணியாற்றி வருகிறது; இதை நான் சொல்வதால் தி.மு.கழகத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றாக்கிக் காட்ட முயலுவதாகக் கருதவேண்டாம்! ஏனென்றால், தி.மு.கழகம் இக்கருத்துக்களை விஞ்ஞானமும் கல்வியறிவும் நன்கு பரவியுள்ள இக்காலத்தில் சொல்லி வருகிறது. இந்தக் காலத்தில் நல்ல கொள்கைகளை எடுத்துச் சொல்ல அதிகத் தைரியம் தேவையில்லை. நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் சொல்ல வேண்டுமானால், நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! “பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது” என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத – விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது! மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்!
இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முகம்மது நபி. அந்த ஒளியின் வெளிச்சத்தை எடுத்துக் காட்டிபவர்கள்தான் நாங்கள்.
சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது, உலகத்தில் நபிகள் நாயகம் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?
நம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயகத்தினுடைய நினைவு வரவேண்டும்.
ஆரம்ப காலத்திலே முகம்மது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக்கொண்டார்களா என்றால் இல்லை. அரேபிய பாலைவனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்டவர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் “360 உருவங்களும் ஆண்டவனல்ல” என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதிலே ஏற்படக்கூடிய பயம் ஓரளவு நீங்கும்.
பொது வாழ்விலே உள்ள சந்தேகங்களையெல்லாம் நபிகளை நினைத்தால் பறக்கும். அவர் காலத்தில் ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்தால் இக்காலத்து ஆபத்துக்கள் வெறும் துரும்புக்குச் சமானம் ஆகும்.
நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று!சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு!
வேண்டாம் அற்புதங்கள்!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.
யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.
அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் – இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் – அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.
அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.
உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு – அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!
அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் – அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் – என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!
எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.
அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!
இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே “இதை நம்பு” என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.
சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.
இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை – கருப்பொருள் – கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.
சொல்லும் செயலும்!
மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.
யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.
இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன? கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.
அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.
இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது? ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை, ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும். அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.
மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.
கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.
நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.
சொல்லுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், நடப்பவர்கள் கீழ்த்தரத்திலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
சமத்துவ மார்க்கம்
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார்.
நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், 1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை ‘மகான்’ என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.
மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப்பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள், தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்டப்பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை, அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை. இனி இருக்கவேண்டிய அவசியமுமில்லை. அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறுநாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியிக்கக்கூடாது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும். அப்பொழுது தான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீடடு வருகிறோம், நாம் முதலில் இறங்கிவேண்டிய இடத்தைச் சொல்லி, வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறான். அப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள்? ‘ அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட!’ என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் ‘ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்’ என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்’ – கடவுளுக்குப் பொதுவாக’ என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?
ஆகையினாலே தான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.
மதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கிறதோ, அப்படியே – அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் கூற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாற நாம் நடந்தால் தனக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழிந்து நல்ல சுற்றுச்சார்புகளை ஏற்படுத்துகிறானோ அவனைத் தான் ‘மகான்’ என்று சொல்லுகின்றோம்.
ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்லமுறையில் அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத்தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும்.
நபிகள் போதித்த இஸ்லாம் மார்க்கம் வைரம் போன்றது. நல்ல வைரத்தைப் பட்டைதீட்டி, அதைக் கையிலே மோதிரமாகவும் செய்து போட்டுக்கொள்ளலாம். காதில் கடுக்கனாகவும் அணிந்து கொள்ளலாம். அதே வைரத்தை விற்று, கிண்டி குதிரைப்பந்தயத்தில் வைத்தும் ஆடலாம். ஆனால் வைரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தான், அந்தப் பயனின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். ஆதைப் போல இஸ்லாம் மார்க்கம் என்ற வைரம் யாருக்கு, எந்த இடத்ததிலே, எப்படி பயன்படுகிறது என்பதிலே தான் அதன் மாண்பு உணரப்படும். இதை எண்ணும் போது நல்லவர்கள் கிடைப்பது என்பது கூட எளிதாகி விடும். ஆனால் அவர்கள் சொல்லி சென்ற கருத்துக்களை பயன்படுத்துவதிலே தான் மதிப்பு உயரும்.
இஸ்லாத்தின் உயர்ந்த மாக்கம் இன்று யாருக்கு பயன்படுகிறது? இதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆதிக்கக் காரர்களுக்குப் பயன்படுமானால், ஏழையை ஐயோ என்று கதற வைப்பவர்களுக்குப் பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பலன் இல்லை. இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப்பயன்படவேண்டும். உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்குவதற்குப் பயன்படவேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகிறதோ அன்றைக்குத் தான் மார்க்கத்தின் முழுப்பலன்களை அடைய முடியும்.
திருத்தொண்டு
கடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.
யார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்.
சாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்? நல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும். அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.
எனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள். வேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே! அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்.
சிறந்த மார்க்கம்
இஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.
இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.
நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.
இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது” என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
ஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும்? என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை. எனவேதான், பழந்தமிழர் மக்கள் “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”. “பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை” என்று கூறியிருக்கிறார்கள்.
கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்! அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின.
கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக “நான்தான்” கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், “நான் அனுப்பியதாகச் சொல்லு!” சொன்னால்தான், மக்கள் “கடவுள்தான் அனுப்பினாரா?” என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப்பார்ப்பார்கள் என்று.
ஒன்றே குலம், ஒருவனே தேவன்
தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.
மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.
மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.
ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.
இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.
ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.
ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான். இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.
இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும். சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும். முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.
இம்மாதிரியான கூட்டங்களிலே இஸ்லாமிய வரலாறு அறிந்தோர் வாயிலாக நபிகள் நாயகத்தின் வீர வரலாற்றை கேட்க விரும்புகிறேன். ஏங்களைப் போன்றோரைப் பேசச் செய்து, இஸ்லாத்தைப் பற்றிய எங்கள் ஞானத்தைச் சோதிப்பதைவிட எங்களைப் போன்றோரை கூட்டிவைத்து இஸ்லாமிய தத்துவ விளக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
காட்டுமிராண்டி காலமான அக்காலத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னே நபிகள் நாயகம் அவர்கள் தன்னந்ததனியாக அக்காலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பொய்யானவை என்றும் அவர்கள் சென்று வழிபட்டக் கோவில், இறைவனின் உண்மையான உறைவிடமல்ல என்றும் எடுத்துக்கூறித் திருத்தினார்கள் என்றால் அதற்காகவாவது சுயமரியாதைக்காரர்கள் அவரை மகான் என்று கொண்டாடுவார்கள். அக்கால மக்கள் ஈடுபட்டிருந்த கோட்பாடுகளையெல்லாம் இடித்துரைக்க எவ்வளவோ நெஞ்சுரம் வேண்டும். நபிகள் நாயகத்தின் நெஞ்சுரம் இறுதி வரையிலே கொஞ்சமும் மாறாததாக இருந்தது. அது மாத்திரமல்ல. அந்த நெஞ்சுரத்தை இஸ்லாமியருடைய பரம்பரைச் சொத்தாக அவர்கள் விட்டு சென்றுள்ளார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறி தழிழ்நாட்டில் பரவி இருந்தது. ஆனால் பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டிணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன. இதைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்.
மார்க்கத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் மாண்பும் உணரப்படுகிறது.
இஸ்லாம் சிறந்த மார்க்கம். அது உலகத்தில், அக்கரமத்தையும் அநியாயத்தை அடக்கப் பாடுபடவேண்டும்.
மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களுக்கு உபதேசிப்பதாக மார்க்கம் இருந்து வருகிறது. கீழே உள்ளவர்களால் மேலே உள்ளவர்களுக்கும் உபதேசிப்பதாக மார்க்கம் இருக்கவேண்டும்.
பிறரிடமிருந்து பணம் பறிக்கவோ, பேரம் பேசிப் பயனடையவோ அன்றி, அக்கரமத்தை ஒழிக்க, மக்களிடையே அன்பை வளர்க்க மார்க்கம் பயன்படவேண்டும்.
எங்களை நாஸ்திகர்கள் எனக்குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் உருவமற்ற ஒரு தெய்வத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை. ஆஸ்திகர்கள் எனத் தன்மைத் தாமே அழைத்துக் கொள்வோர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூட்டிய பட்டம் தான் ‘நாஸ்திகர்கள்’ என்பது உண்மையிலேயே உலகத்தில் நாஸ்திகள் என ஒரு கூட்டத்தார் இருந்ததில்லை. அப்படி ஒருவேளை இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல.
ஆண்டவனை ஐயப்படும் அளவுக்கு ஈனப்பிறவிகளாக அந்த ஆண்டவனால் படைக்கப்ட்டவர்களல்ல நாங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
அறப்பணி
என்னுடைய பொதுவாழ்வில் மதங்களின் ஆராய்ச்சியிலும் அவற்றிலுள்ள குறை நிறைகளை ஒரளவு ஆராய்ச்சியில் கவனம் காட்ட முனைந்ததே சந்தர்ப்பத்தின் சந்திப்புக்களால் சமைந்ததுதான். என்னுடைய பொதுவாழ்வின் துவக்கக் காலத்தில் நான் மேடையைத் தேடிப் பிடிக்க வேண்டியவனாயிருந்தேன். வலிய வரும் அழைப்பெல்லாம் பொதுவாக மதாச்சார மேடைகளாகவே இருந்தது. சில சமயம் அம்மாதிரி மேடைகளில் நிர்ப்பந்தத்துக்காக்கூட ஏறுவதுண்டு. சில நேரம் அதிலுள்ள குறைநிறைகளைக் கூறவும் ஏறுவதுண்டு. இந்த சந்தர்ப்பம், என்னை மத ஆராய்ச்சியில் வலியவே தள்ளிவிட்டது. ஒன்றினை அறிய, அதில் எழும் ஐயங்களுக்காக – மற்றொன்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு – படிப்படியாக அம்மதங்களின் முக்கிய நூல்களைப் படித்து முடித்து விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.
எனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல! நான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து, குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது. திருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
என்னுடைய பொதுவாழ்வு சுடர்விட என்னுடைய இதயமூச்சின் இலட்சிய மேடையான திராவிடக் கழக மேடையுடன் நபிகள் நாயக மீலாது மேடையும் எனக்குக் கைக்கொடுத்ததை நான் மறந்து விட முடியாது. ஏறத்தாழ முந்நூற்றுக்கதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கிறேன். நானும் எனது கொள்கையும் சொல்லி வந்த சமுதாய சீர்திருத்த பிரச்சார பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏகதெய்வக்கொள்கை எங்கட்டு பெரிதும் பிரச்சாரத்துணை நின்றது. கல்லையும் மண்ணையும் பூசிக்காதீர், கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக்கொண்டிருந்த எங்கள் இலட்சியப்பணி, மீலாது மேடையின் மூலம் சுடர்விட நல்லவாய்ப்பு இருந்தது.
ஏகதெய்வக்கொள்கையை “ஒன்றே குலம் ஒருவனேதேவன்” எனும் உண்மை தாத்பரியத்தை, மக்களை ஏற்கச் செய்ய எவ்வளவோ பிரச்சாரம் தொடுத்தும், முழுப்பயனும் எட்ட முடியாமல் உள்ளம் வெதும்பும் நம்முடைய பிரச்சாரத்தையும், 1400 ஆண்டுகட்கு முன்பு எந்த வித நவயுக பிரச்சார சாதனமும் இல்லாத அந்த நாட்களில் திரும்பும் திசைதோறும் கடவுளின் சிலை வடித்து தினமொரு இறைவனை உண்டு செய்த அறிவாற்றலற்ற அந்த மக்களை – நபிகள் நாயகத்தின் 23 வருட பிரச்சார பலம் எத்துனை வெற்றிக்கு இழுத்து வந்து, ஒரே இறை, ஒரே மறை என்ற கருத்தை உள்ளத்தால் ஒத்துக்கொள்ளச் செய்து, அதுவும் உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் பரவி, பண்புடன் வாழச் செய்திருக்கிறது என்றால், அந்த மனிதப் புனிதரின் நாவன்மைக்கிருந்த நல்ல மதிப்பீட்டை, மகத்துவத்தை எண்ணிப் பூரித்து நன்னயத்திற்கு துணைபோக வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இத்துணை மகத்துவம் அந்த மாநபிக்கு இருக்கக் காரணமே, அந்த பெருமகன் தன் உயிரினும் மேலாக கட்டிக் காத்து வந்த பொறுமையும், சொல்லும், செயலும் இணைந்த வாழ்வும், நடைமுறை வாழ்க்கையில் தடையின்றிச் செல்லத்ததுணை நின்ற சட்டமும், தன்னையும் தன்னை பின்பற்றுவோருள் ஒருவராக்கி சொன்னதோடல்லாமல் செய்து காட்டும் செம்மலாமல் செம்மலாகவே இருந்ததும் மூல முதல் காரணமாகும்! மற்றெல்லா மதங்களிடையேயும் இல்லாதிருக்கும் இணையற்ற மதிப்பு, அதன் சட்டத்திட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கேற்ற நல் அமைப்பாகும். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீசும் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சிய பொக்கிஷமான இறைமறை திருக்குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறை வழிகளைக் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன, இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய தூண்டுகோலாகும்!
எழுச்சி இதயம் என்பது அறிவைத் தேடி அலையும் ஆற்றல் உள்ளதாக அமைதல் வேண்டும். நான் இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன் இப்போதும் சொல்கிறேன். நான் ஒரு கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை போடாத கிறிஸ்தவன், திருநீறு அணியாத ஹிந்து, நல்லவை எங்குதென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழந்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடுவது போல, ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை – அவை இருக்கும் இடம் பற்றி கவலைப்படாமல் எடுத்து வந்து விடுவதுண்டு.
அப்படி இஸ்லாத்தில் நான் எடுத்துக் கொண்டவைகளுள் மிக முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையின் உரிமையை நான் மிகப் பெருமையாக அனுபவித்து வருகிறேன். வாய்மையில், வளர்க்கும் மனத்தூய்மையில் சிறக்கும் பொருமை ஒன்றில் தான் உலகம் அளப்பரிய சாதனைகளைக் காண முடிந்தது. அந்த சாதனைகள் இஸ்லாமிய வரலாறெங்கும் வளர்ந்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. வாளேந்தி, வன்சமர்புரிந்து சாதிக்க முடியாத சாதனைகளைக் கூட நபிகள் பிரானின் இன்சொல்லும், புன்முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுதமான பொறுமையினாலும் வெற்றி கொண்டு இருக்கிற சக்தி அண்ணலின்பால் எனக்கு அளப்பரிய பக்தியை உண்டாக்கி விட்டது.
இஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும். இத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளமுடியும். பலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுபவர்களுக்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்? அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் என்ற முள்கூட கையிலே குத்தி, குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை. தெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள்புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பது போல், நல்ல சுவையுள்ள கனி கிடைக்கும் சுந்தரமார்க்கம் இஸ்லாமாகும்.
பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்டதுயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி, இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.

 Thanks to :-  http://vapuchi.wordpress.com/

பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் யுவான் ரிட்லி

                 அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.

               கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.

ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.
இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.

ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்....

''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.

தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.

என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ''கெட்ட பெண்'' என்று அழைத்தார்கள்.

ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை'' நானா? அல்லது அவர்களா?)
எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.

நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.

எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.

இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு ஆதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.

புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.

மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும்.

மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.

இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்?

பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.

நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன்.

ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ''வாடகைக்கு'' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள்.

நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான்.

மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் ''பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே'' என்றும் ''பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?'' என்றும் கமெண்ட் அடித்தான்.

ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.
நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.

ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை.

இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?

இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்ஸ. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது.

இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.
இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்:

அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: ''பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.''

(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் ''In the Hands of Taliban: Her Extra ordinary Story'' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh@aol.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது ''நியூஸ் வீக்'' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)

''Jazaakallaahu khairan'' source: - vapuchi.wordpress.com

முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர்

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?

[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.

பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் ]
 

அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.

ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.

நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?

செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.

அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குர்ஆனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.

கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.
''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (Hijab) அணிந்து கொண்டாலும் நிகாபை (Niqab) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)

ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.

நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.

பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன்.

நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.

சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான்.

நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.''


தமிழ் மொழியாக்கம் . எம்.ஏ. முஹம்மது அலீ,
 

[ Sara Bokker is a former actress, model, fitness instructor, and activist. Currently, Sara is director of communications at The March for Justice, a cofounder of The Global Sisters Network, and producer of the infamous Shock & Awe Galleryய©.]