15 செப்., 2017

வானம் பூமியின் முகடு (கூரை) - அல்குர்ஆன்



பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது –

வானத்தை "பாதுகாக்கப்பட்ட முகடு" என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

* உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக! (52:5)


* அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்! (2:22),


வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர். (21:32)


அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். உங்களுக்கு வடிவம் தந்தான். உங்கள் வடிவங்களை அழகுற அமைத்தான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன். (40:64)

கூரை, முகடு என்று கூறுவதாக இருந்தால் மேலிருந்து வரும் ஆபத்துகளையும் கடும் வெப்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். 

"நமக்கு மேல் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும் வானம் எப்படிக் கூரையாக முடியும்?" என்று சிலர் எண்ணலாம். 

நவீன ஆய்வுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் திருக்குர்ஆன் கூறுவது போல் வானம், பூமிக்குக் கூரையாக அமைந்துள்ள அதிசயத்தை அறிந்து கொள்ளலாம்.
வானம் என்பது என்ன?

வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும்.

வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53, 22:63, 23:18, 25:48, 27:60, 29:63, 30:24, 31:10, 35:27, 31:21, 43:11, 50:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இந்த வானத்தை நாம் எளிதில் அடைந்து விடலாம். விமானத்தில் பயணம் செய்பவர் இந்த வானத்துக்கும் மேலே அதாவது மழைபொழியும் மேகங்களுக்கும் மேலே பயணம் செய்ய முடியும். 

பறவைகள் வானத்தில் வட்டமடிக்கின்றன என்று குர்ஆன் சொல்வது வெட்ட வெளியைத்தான். 

விஞ்ஞானிகள் இந்த வானத்தையே திடப்பொருள் அல்ல எனவும் சூனியம் எனவும் கூறுகின்றனர். இதனால் தான் நாம் இதை விமானத்தின் மூலம் தடையில்லாமல் கடந்து செல்ல முடிகிறது. 

இது அல்லாத இன்னொரு வானத்தைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது. அது மனிதன் இன்னும் சென்றடையாத தொலைவில் இருக்கிறது. ஏழு அடுக்குகளைக் கொண்டதாக அது படைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
திருக்குர்ஆன் 41 : 12 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்னுலகப் பயணம் அழைத்துச் சென்றபோது அவர்கள் ஒவ்வொரு வானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அங்கே வானவர்களை திறக்கச் சொல்லி அதன் வாசல்கள் திறந்த பின்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல முடிந்தது. 

இவ்வாறு ஏழு வானங்கள் உள்ளன. இந்தவானத்தை விஞ்ஞானிகள் இன்னும் அறிவால் கூட அடையவில்லை. இவர்கள் ஆகாயம் எனும் வெட்ட வெளியின் இறுதி எல்லையைக் கூட அடையவில்லை. அது திடப்பொருள் என்றோ திரவப்பொருள் என்றோ இன்னும் அவர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை. 

எந்த வசனத்தில் எந்த வானம் பற்றி பேசப்படுகிறது என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம். 

மனிதனுடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி பேசும்போது வானம் என்பது வெட்டவெளி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

மனிதன் அறிந்திராத நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் குறித்து வானம் என்று சொல்லப்பட்டால் அது மனிதன் சென்றடையாத ஏழு அடுக்குகளைக் கொண்ட திடப்பொருளான வானம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  வானம் பாதுகாக்கப்பட்ட முகடு 

வானத்தை "பாதுகாக்கப்பட்ட முகடு" என்று இவ்வசனங்கள் (2:22, 21:32, 40:64, 52:5) கூறுகின்றன. 

கூரை, முகடு என்று கூறுவதாக இருந்தால் மேலிருந்து வரும் ஆபத்துகளையும், கடும் வெப்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். 

"நமக்கு மேல் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும் வானம் எப்படிக் கூரையாக முடியும்?" என்று சிலர் எண்ணலாம். 

நவீன ஆய்வுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் திருக்குர்ஆன் கூறுவது போல் வானம், பூமிக்குக் கூரையாக அமைந்துள்ள அதிசயத்தை அறிந்து கொள்ளலாம்.  

சந்திரனில் பகல் நேர வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடாக உள்ளது. சந்திரனுக்கு அருகிலுள்ள பூமியிலும் ஏறத்தாழ இதே அளவு வெப்பம் தான் இருக்க வேண்டும். ஆனால் சராசரியாக 40 டிகிரி அளவுக்குத்தான் பூமியில் வெப்பம் உள்ளது. இதற்குக் காரணம், நமக்கு மேலே உள்ள காற்றுக்கூரை தான். 

தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரை காற்றின் முதல் அடுக்கு உள்ளது. இது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்து, சூரியனின் வெப்பம் முழுமையாக பூமியைத் தாக்காமல் காக்கின்றது. 

இந்த அடுக்கில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு அதிகம் உள்ளதால் இது கூரை போல் செயல்படுகிறது. 

பூமியிலிருந்து 16. கி.மீ. முதல் 50 கி.மீ. வரை அடர்த்தி குறைவான, விமானம் பறப்பதற்கு ஏற்ற காற்று உள்ளது. 

இந்த இரண்டாம் அடுக்கில் பூமியிலிருந்து 20 முதல் 35 கி.மீ. வரை ஓசோன் படலம் உள்ளது. சூரியனிலிருந்து ஏழு வண்ணங்களில் கதிர்கள் வெளிப்படுகின்றன. அதில் புறஊதாக் கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்த உயிர்க் கொல்லியாகும். உயிரினங்களிலுள்ள அணுக்களை இக்கதிர் அழித்து விடும். 

தண்ணீரிலுள்ள கிருமிகளை அழிப்பதற்கு இந்தப் புறஊதாக் கதிர்களைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் உள்ளது. இந்தக் கதிர்கள், தண்ணீரிலுள்ள அனைத்துக் கிருமிகளையும் முற்றிலுமாக அழிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது. 

இத்தகைய சக்தி வாய்ந்த புறஊதாக் கதிர்கள், உயிரினங்கள் மீது பட்டு உயிரினங்கள் அழிந்து விடாத வகையில் ஓசோன் படலத்தால் தடுக்கப்படுகின்றது.
இந்த வகையிலும் வானம் கூரையாக அமைந்துள்ளது. 

பூமியிலிருந்து 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை நடுஅடுக்கு உள்ளது. விண்ணிலிருந்து அவ்வப்போது விண்கற்களும், வால்நட்சத்திரங்களும் மணிக்கு 43,000 முதல் 57,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வருகின்றன. 

இதில் சில கற்கள் 96,000 ச.மீ. பரப்பளவு கொண்டதாகும். இவ்வளவு பெரிய விண்கற்கள் சுமார் 50,000 கி.மீ. வேகத்தில் வந்து பூமியைத் தாக்கினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் சேதம் பூமியில் ஏற்படும். ஆனால் அப்படி நடக்காமல் சீறி வரும் விண்கற்களை இந்த நடுஅடுக்கு எரித்து, சாம்பலாக்கி விடுகின்றது. 

தப்பித் தவறி சிதறுண்டு விழும் விண்கற்களின் வேகமும் மட்டுப்படுத்தப்படுகிறது.
இந்த வகையிலும் வானம் கூரையாகச் செயல்படுகின்றது. 

பூமியிலிருந்து 80 கி.மீ. முதல் 1600 கி.மீ. வரை வெப்ப அடுக்கு உள்ளது. ஹீலியம், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் இங்கே அதிகம் உள்ளதால் இந்த அடுக்கு வெப்பப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒலி, ஒளி அலைகள் இங்கே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. 

இந்த வகையில் பூமியை விட்டு ஒலி, ஒளி அலைகள் வெளியேறாமல் தடுக்கும் கூரையாகவும் இது அமைந்துள்ளது. 

வானத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான தடுப்புகளை ஏற்படுத்தி விட்டுத்தான் வானத்தைக் கூரை என்று இறைவன் கூறுகிறான். 

திருக்குர்ஆன் இறைவனின் கூற்று என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாக உள்ளன.

25 ஆக., 2017

மறை நீர் (Virtual water)



.பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

நாம் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு இது.
உங்களின் அனைத்து குழுக்களுக்கும் பகிர்வு செய்யுங்கள்.

9 பிப்., 2017

“காளான்” (Mushroom ) நம்மில் எத்தனை பேர் சாப்பிடுகிறோம்?

நம்மில் எத்தனை பேர் “காளான்” (Mushroom ) உணவை சாப்பிடுகிறோம்?, இதோ அதிகளவில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

**
#புரதச்சத்து அதிகம் இருக்கிறது, மேலும் இதில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு இல்லை. நார்ச்சத்து மற்றும் இதிலிருக்கும் சில என்ஸைம்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. மேலும் உடலில் இருக்கும் எல்.டி.எல் (தீய) மற்றும் எச்.டி. எல் (நல்ல) எனும் இருவகையான கொழுப்புகளை கட்டுக்குள் வைக்கவும் காளான் பயனளிக்கிறது. இதனால் இதயக் கோளாறுகள் ஏற்படுவதை குறைக்க முடியும்

#இரத்த_சோகை உள்ள நபர்களிடம் இரும்புச்சத்து அளவு இரத்தத்தில் குறைவாக இருக்கும். இதனால் மயக்கம், தலைவலி, நரம்பியல் செயல்திறன் குறைபாடு, செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படலாம். காளானில் அதிக இரும்புச்சத்து இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்து 90% முழுமையாக உடலுக்குள் உள்வாங்கப்படுகிறது. இதனால் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் தூண்டிவிடப்படுகின்றன

#மார்பக_மற்றும்_புரோஸ்டேட்_புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கு உதவுகிறது

உயர்ரக கால்சியம் உள்ளது. இது #எலும்புகளின்_வலிமையை அதிகரிக்க பெருமளவு உதவுகிறது.

#ஊட்டச்சத்துக்கள்_Ergothioneine" எனும் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

#பொட்டாசியம்_மற்றும்_ தாமிரம் (Copper)  அளவு அதிகமிருக்கிறது, இரத்த நாளங்களை இலகுவாக உணர செய்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் கூட குறைக்கப்படுகிறது

அதிகளவில் #கொழுப்பை_குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவும் மேலும், இயற்கையாக விளைவிக்கப்படும் காளானால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. இதனால், இது உடல் எடையை குறைக்க ஓர் சிறந்த உணவாக திகழ்கிறது

#ஓர்_உடல்நல_பகிர்வு

7 பிப்., 2017

சத்துமாவு

சத்துமாவு தயாரிக்கும் முறை !!!

*இதுதான் உண்மையான சத்துமாவு  இதை தயாரிக்கும் முறை:*

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

*தேவையான பொருட்கள்:*


  • ராகி 2 கிலோ
  • சோளம் 2 கிலோ
  • கம்பு 2 கிலோ
  • பாசிப்பயறு அரை கிலோ
  • கொள்ளு அரை கிலோ
  • மக்காசோளம் 2 கிலோ
  • பொட்டுக்கடலை ஒரு கிலோ
  • சோயா ஒரு கிலோ
  • தினை அரை கிலோ
  • கருப்பு உளுந்து அரை கிலோ
  • சம்பா கோதுமை அரை கிலோ
  • பார்லி அரை கிலோ
  • நிலக்கடலை அரை கிலோ
  • அவல் அரை கிலோ
  • ஜவ்வரிசி அரை கிலோ
  • வெள்ளை எள் 100 கிராம்
  • கசகசா 50 கிராம்
  • ஏலம் 50 கிராம்
  • முந்திரி 50 கிராம்
  • சாரப்பருப்பு 50 கிராம்
  • பாதாம் 50 கிராம்
  • ஓமம் 50 கிராம்
  • சுக்கு 50 கிராம்
  • பிஸ்தா 50 கிராம்
  • ஜாதிக்காய் 2
  • மாசிக்காய் 2

*செய்முறை :*

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

*பயன்கள்*

1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.

2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

*குறிப்பு:*

6 மாதம் கெடாது

1.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.

2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.